Friday, June 26, 2009

எப்போதும் வாழும் எசக்கி்கள் - உரையாடல் சிறுகதைப் போட்டிக்கு




கால்களை மாற்றிப் போட்டு "தப்பு"ல தனக்கு தெரிஞ்ச தாளத்தை வாசித்துக் கொண்டிருந்தான் பத்து வயசு மாரி. அவனுக்கெதிரே கண்களில் நீர்முட்ட அமர்ந்திருந்தார் குருட்டுத் தாத்தா.

குருடு என்றால் முழுவதும் குருடுயில்ல பார்வை சற்று மங்களாகத் தெரியும் அவ்வளவுதான், அதுவும் இப்பதான் ஒரு அஞ்சாறு வருசமா. தலை லேசாக ஆடிக்கொண்டிருந்தது, கொஞ்சம் எட்டியிருந்து பார்ப்பவருக்கு அவர் தாளத்துக்கு தலையாட்டுவது போல தெரியும், ஆனால், கிட்டத்துல வந்தாதான் தலை எப்போதுமே லேசான ஆட்டத்தோடு இருப்பது தெரியும். உடலெங்கும் வாழ்வின் வரிகளாக சுருக்கங்கள், எப்படியும் தொண்ணூறு வயசிருக்கும். பார்வைதான் மங்கலே தவிர மற்றபடி நடை, உடையுடன் தான் இருப்பார்.

திடிரென மாரி, பறையை அடித்துக் கொண்டே எழுந்து லேசாக ஆட ஆரம்பித்தான். கிழவனுக்கு உடனே எசக்கியின் நியாபகம் வர கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

"அப்படிப்போடுறா என் சிங்கக் குட்டி" என்று எசக்கி வாசிக்கும் போது அருகில் இருந்து பார்த்தது நினைவு வந்தது.

உறவுமுறையில் தாத்தா இல்லாவிட்டாலும் எதிர்க் குடிசையில் இருந்ததால, ரொம்பவும் நெருக்கமாகிவிட்டார் குருட்டுத் தாத்தா. ஊருக்குதான் அவர் குருட்டுத் தாத்தா, ஆனால் எசக்கிக்கு மட்டும் இவர் வாத்தித் தாத்தா. ஆம் பத்து வயசிருக்கும் போது குருட்டுத் தாத்தாவின் வாசிப்புக்கு ஆடத்துவங்கியவன் எசக்கி, அப்படியே அவருடைய சிஷ்யப்பிள்ளையாகிவிட்டான். அவரது முதல் அபிமான மாணவன், இரசிகன் எல்லாம் எசக்கிதான். அன்னிலிருந்து தாத்தாவோட தப்பை சூடேத்தறதுக்கு வைக்கோலை கொளுத்தறதுலேருந்து, ஊர்ல செத்துப் போன மாட்டுலேருந்து தோல் உரிக்கிறவரைக்கும் எல்லாத்துக்கும் எசக்கிதான் துணை தாத்தாவுக்கு.

குருட்டுத்தாத்தாவுக்கு பறை வாசிப்பதில் கொஞ்சம் அதிகப்படியான திறமையும் பெருமையும் உண்டு. அதுவே அவரோட தனிமைக்கும் காரணமாயிருச்சு. வெறும் மூணு தெருவுள்ள அந்த கிராமத்துல ரெண்டு தெரு தள்ளியிருந்த காலனிலதான் இருந்தார்கள் தாத்தாவும் எசக்கியும்.

வாலிப வயசுல உச்சிப் பொழுதுகூட தெக்கெயிருக்குற சுடுகாட்டுலதான் தாத்தா அதிகமா வாசிச்சுக்கிட்டேயிருப்பார். அவரு அங்க வாசிக்கிறார்னா அன்னிக்கு அவரோட மரியாதைக்கு சோதனை வந்து, தோத்துப்போன கோபத்துல இருக்கார்னு அர்த்தம். இவர் என்னதான் திணவோட காரியஞ்செஞ்சாலும், அதிக நேரம் சுடுகாட்டுலதான் செலவழிக்க வேண்டியிருந்தது. அவரோட கோபமும் தோல்வியும் காலப்போக்கில அவர தனியாளாவே விட்டிருச்சு .

எசக்கிக்குத் தன்னோட கலைய மட்டும் சொல்லிக் கொடுக்காம, அதுமேல அவருக்கிருந்த மரியாதையையும், பெருமிதத்தையும் சேத்து சொல்லிக் கொடுத்துட்டார். அவர் சொல்லி கொடுத்த மரியாதைதான் எசக்கிக்கும் வாழ்க்கையை போராட்டமாக்கிருச்சு. குருட்டுத் தாத்தா அளவுக்கு அவனால செயிச்சு வரமுடியலன்னுதான் சொல்லனும். தினம் அவனோட கலைக்கும், மரியாதைக்கும் ஏதாவது சோதனை வச்சிகிட்டே இருக்கும் அந்த கிராமம்.பொதுவா கிராமத்துக்கும் வடக்கெயிருக்கும் குடியானச் சுடுகாடும் தெக்கெயிருக்கும் காலனிகாரங்களுக்கான சுடுகாடும்தான் எசக்கி அதிகமா தன்னோட வாசிப்பைக் காட்டுற எடம்.

தாத்தா அளவுக்கு நெஞ்சுரம் இல்லாததாலோ, அல்லது குடும்பச்சுமையோ தெரியாது, எசக்கிக்கும் சந்தோசம் துக்கம்னு இந்த ரெண்டுக்குமிடையே தான் தேர்வு செய்ய முடிஞ்சிது.

என்னதான் உரிமையா எல்லா வேலையும் செஞ்சு குடுத்தாலும், எவ்ளோ பாசம் வச்சிருந்தாலும், தன்னோட ஆண்டையோட பொண்ணு கல்யாணத்துல "நீ என்னடா மொதோ பந்திக்கே வந்துட்ட" ன்ற ஒரு கேள்வி போதும், இவன் சுருங்கிப் போயி அன்னிக்கு ராத்திரி பூராவும் தெக்கேதான் கெடப்பான். வருத்தம் தீர்ற வரைக்கும் வாசிச்சுத் தீத்துடுவான்.

என்னதான் இவனோட திறமைக்காக வேலை குடுத்தாலும், வேலை முடிஞ்சவுடனே கூலிய கொறச்சு குடுக்கறுதுக்காகவே
" **** வேலையே அரை வேலதான்னு" காலங்காலமா சொல்லிகிட்டே வர்ற ஒரு வார்த்தை போதும் அன்னிக்கு இராத்திரி முழுக்க தெக்கதான் இருப்பான்.

இப்படி பெரும்பாலும், தெக்கயேதான் வாசிச்சுகிட்டிருப்பான். அப்பொவெல்லாம் மாரிதான் அடுத்த நாள் போயி எழுப்பிகிட்டு வருவான். பெரும்பாலும் தாத்தா கோவத்துல வாசிச்ச இடத்துல
எசக்கியால சோகமாதான் வாசிக்க முடிஞ்சுது. தாத்தாவுக்கும் இது தெரியும், அதனால தெக்கெயிருந்து சத்தம் கேட்டாலே குடிசைல இருந்த படியே மனசு கணத்து போயி உக்காந்துருப்பார்.

ரொம்ப விவரம் தெரியாத வயசுல சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சந்தோசப்பட்டு வடக்க இருக்க குடியானச் சுடுகாட்டுக்குப் பக்கத்துல இருக்கற அரச மரத்துல உக்காந்து வாசிச்சுகிட்டிருப்பான், தாத்தாவும் அவன் சந்தோசத்துல வாசிச்சா வீட்டுலயே ஒரு புன்னகையோட உக்காந்து ரசிச்சிகிட்டிருப்பாரு. ஆனா விவரம் தெரிஞ்சதுக்கப்புறம் அவன் வடக்க வாசிச்சு வருசக்கணக்காச்சு.

ரொம்ப வருசம் கழிச்சு முந்தாநேத்து சாயங்காலம் வடக்கேருந்து எசக்கி வாசிச்ச சத்தம் கேட்டவுடனேயே தாத்தாவுக்கு இங்க குடிசைல இருப்பு கொள்ளல. எப்ப அவன் வீடு வந்து சேருவான் விவரம் கேக்கலாம்னு காத்துகிட்டிருந்தார். ஆனா அன்னிக்குன்னு அவன் சீக்கிரம் வர்ற வழியக் காணும்.

அடுத்த நாள் எசக்கியோட குடிசைல ஒரே கலேபரம், அழுகை, கூச்சல். ஒரு வழியா தட்டுத்தடுமாறி வெளியே வந்த தாத்தா ஒரு கணம் அதிர்ந்து போயிட்டாரு. குடியான தெருக் கோடில இருந்த வீட்டுப் பொண்ணும் எசக்கியும் முந்தாநேத்து ராத்திரி டவுனுக்குப் போயி புது வாழ்க்கை தொடங்கலாம்னு இருந்தாங்கலாம். அப்படி போன எசக்கிய அந்தப் பொண்ணோட சொந்தங்கள் எல்லாம் துண்டு துண்டா திருப்பி எடுத்து வந்து காலனில போட்டுட்டானுங்கன்னு விபரம் சொன்னான், பக்கத்து வீட்டுப் பையன்.

"சரி வா தாத்தா வீட்டுக்கு போகலாம்"னு மாரிசொன்னதும் கிளம்பினார் தாத்தா. மாமன் எதுக்காக செத்துப்போனான்னு கூட விபரம் புரியாமல், கைல இருந்த எசக்கியோட "தப்புல" தட்டிகிட்டே தாத்தாவோட நடந்து கொண்டிருந்தான் மாரி. எரிஞ்சிகிட்டிருந்த எசக்கியின் உடலை திரும்பி பாத்துக்கிட்டே, இனி எல்லா குடியானச் சாவுக்கும் சந்தோசமா வாசிக்கச் சொல்லிக்குடுக்கனும் மாரிக்குன்னு வெம்மிகிட்டே நடந்தார் தாத்தா.






Monday, June 22, 2009

சில நேரங்களில் சில முகங்கள்

மறத்தல், நினைத்தல், மறந்தது போல் நடித்தல், பின் மீண்டும் நினைத்தல், மறத்தல்...... என்பதாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு.

பல சமயங்களில் இவையெல்லாம் மறந்து போனால் என்ன? என்று தோன்றுவதுண்டு. இவற்றை எனது மூளைச் செல்களின் இடுக்குகளில் துழாவி எடுத்து வெளியே எறிய முடிந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று கூடத் தோன்றுவதுண்டு.

வகைதொகையில்லாமல் ஒன்று கூடி பித்து நிலைக்கு விரட்டிவிடுவதுண்டு சில முகங்கள்.

அவர்கள் இப்போது எப்படியிருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு?
என திடீரென்று மின்னலாய் வெட்டிச் செல்லும் சில நினைவில் தங்கிய முகங்கள் பற்றிய ஒரு மீள்பார்வையே இவ்விடுகை.

**********************************************************************************************

மழையினை இரசிக்காத நாளும், ஆளுமுண்டா? ஆனால், அப்படியொரு மழைச்சாரலில் திடீரென தோன்றும் சில கேள்விகள் இவை "அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு? "

சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தினை உயர்த்தி தனது பெருமையை உயர்த்தத் துடித்துக்கொண்டிருந்தது அரசு. அதன் விளைவாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஆதிவாசிகள் இடம்பெயற நிர்பந்திக்கப்பட்டனர், வழமைபோல், சரியான மாற்று நிலங்கள் வழங்காமை, மற்றும் போதிய பதிலீடு செய்யாமை என அரசின் எல்லா குப்பைச் செயல்பாடுகளும் இங்கேயும் உண்டு. மேலும், அதிகமான ஊழல் நடந்துள்ளதாக உலக வங்கி பின்வாங்கிக் கொண்ட பெருமைமிகு செயல்பாடுகளும் இவ்வணைக்கட்டுத் திட்டத்திலுண்டு.





புகைப்படம்: http://www.narmada.org/images/satyagraha2003/sat8.jpg

"Narmada Bachao Andolan" மற்றும் மேதா பட்கர் உண்ணாநிலை ஆகியவை அநேகமாகப் பலருக்கும் நினைவிருக்கும். ஆனால், அதைப்பற்றி ஒன்றும் பேசப் போவதில்லை. அதுகுறித்த விரிவான கட்டுரையொன்று இங்கே
(நர்மதா தரும் செய்தி - http://rozavasanth.blogspot.com/2006/06/blog-post_04.html) இருக்கிறது. இது குறித்து மேலதிகத் தகவல்கள், தற்போதைய நிலவரம் மற்றும் புகைப்படங்களுக்கு இங்கே செல்லவும்: http://www.narmada.org/

இவ்வணைப் பிரச்சனையை முன்வைத்து "Drowned out" என்ற ஆவணப்படமொன்று வெளிவந்தது. அதிலே புகாரியா மற்றும் அவரது மனைவி என்றொரு சிறு அதிவாசிக் குடும்பம் வரும். திடீரென மழை பொழியும் நாட்களில் அவர்களைப் பற்றிய நினைவு வரும். அப்போதே அவர்கள் வீட்டு வாசல்வரை தண்ணீர் வந்திருந்தது, "அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு? " கீழே அவ்வாவணப்படத்தின் சிறு பகுதியொன்று இருக்கிறது.




அத்திரைப்படத்தில் வரும் ஆதிவாசிகள் பலரும் பயன்படுத்தும் வார்த்தைகள் "அவர்கள் " - "நாங்கள்" ... எவ்வளவு அந்நியப்பட்டிருக்கிறோம் வல்லரசு இந்தியாவின் நவீனப் பிரஜைகள், மண்ணின் மைந்தர்களிடமிருந்து.. திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் புகாரியின் மனைவி "அவர்கள் நாங்கள் சாக வேண்டுமென்று நினைக்கிறார்கள்" - என்று குறிப்பிட்டு ஒரு விநாடி நிறுத்துவார், விழிகளிலிருந்து ஒரேயொரு சொட்டுக் கண்ணிர் விழும். அவ்வொருவிநாடி மொளனமும் ஒரு சொட்டுக் கண்ணீரும் ஏற்படுத்தும் வலி ..........

*************************************************************************************************

அடுத்ததாக கீழேயுள்ள ஆவணப்படம், ஆனந்த் பட்வர்தன் அவர்களால் எடுக்கப்பட்ட மற்றொரு ஆவணப்படம் "War and Peace". தலா 50 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் இரண்டு குறுந்தகடுகளாக கிடைத்தது. இப்படத்திலும் அரசியல் தளத்தில் உரையாடப பல இருந்தாலும், அதுபற்றி பேசப்போவதில்லை. கீழே கொடுக்கப்பட்ட சிறுபகுதியில் கூட அரசியல் உரையாடல் மட்டுமே இருக்கும், வேறு பகுதிகள் இணையத்தில் கிடைக்கவில்லை தற்போதைக்கு இதுதான் கிடைத்தது.







இவ்வாவணப் படத்திலும், பீகாரின் ஜடுகுடா மலைப்பகுதிகளில் இருக்கும் அதிவாசிகள் சமூகத்தினர் பற்றிய சில பகுதிகள் உண்டு. அங்கேயே பிறந்து வளர்ந்து, பின் மருத்துவம் பயின்ற மருத்துவர் மீண்டும் தம்மக்களிடமே சென்று அங்கே அவரது மக்களுக்கு யூரேனியத் தாதுக்களினால் ஏற்படும் கதிரியக்கக் பாதிப்புகளுக்கான சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இறுதியில் அவருக்கும் புற்றுநோய் தாக்க, கண்கள் மட்டும் வெளித்தெரியும் படி ஒரு முகமூடியுடன் "உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன்" என்று பேட்டி அளித்திருப்பார்.

"அவர் இப்போது எப்படி இருப்பார்? என்னவாகியிருக்கும் அவருக்கு? "

அங்கேயிருக்கும் மக்களும் தங்கள் உரையாடலில் பயன்படுத்தும் சில வார்த்தைகள் "அவர்கள்"-"நாங்கள்"... ஆம் அவர்களினது வடுக்களின் மீது ஏறிநின்றுதான் நாம் தினமும் மாலையில் மின்விளக்கையேற்றுகிறோம்/ ஏற்றப்போகிறோம் வல்லரசுக் கனவுகளோடு.

***********************************************************************************

இவ்விடுகையை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் மேற்கு வங்கத்தின் "லால்கார்க்"கில் சில முகங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
மேலும் விபரங்களுக்கு http://sanhati.com/front-page/1083/


தமிழில்: இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!
இங்கேயும்: http://www.thenaali.com/thenaali.aspx?A=349
புகைப்படம் 29/06/09 அன்று பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டது.
************************************************************************************

இதெல்லாவற்றுக்கும் மேல் பித்து நிலைக்கு் விரட்டும் முகங்கள் சிலவுண்டு.

சில மாதங்களுக்கு முன் பி.பி.சி தனது வலைத்தளத்தில், பதுங்கு குழிகளுக்குள்ளே இருந்து மருட்சியோடு வானை நோக்கும் ஈழத்துப் பள்ளிச் சிறுவர் சிறுமியர் சிலரினது புகைப்படத்தை வெளியிட்டது. குண்டடிபட்ட இறந்த உடல்களைவிட இக்குழந்தைகளின் மருட்சி ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமாகவேயிருக்கிறது. மேலேயுள்ள எல்லா முகங்களும் குற்றவுணர்ச்சியில் சிறுகச் செய்தாலும், இக்குழந்தைகளின் முகங்கள் என்கைகளில் இருக்கும் உறைந்து போன இரத்தக் கறையின் வாடையோடு வந்து போகிறது. என்ன செய்து கழுவுவது....
????

************************************************************************************
மனிதனாக இப்பூமியில் வாழ்ந்து முடிப்பதற்குள் இன்னும், எத்தனை முகங்களையும், எத்தனை குற்றங்களையும் சுமக்க வேண்டியிருக்குமோ ......

Friday, June 19, 2009

தாம்புக் கயிறு


காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது சங்கரனின் கையிலிருந்த தினசரியின் பக்கங்கள். காலை வெயிலில் மொட்டைமாடியில் கையில் தினசரியும், அருகில் ஆவிபறக்கும் காபியும் சேராவிட்டால் அன்றைய தினம் முழுமையடையாது சங்கரனுக்கு.

"இந்தாங்க காபி" என்றாள் மனைவி. "என்னங்க போட்ருக்கு பேப்பர்ல" என்றாள். "ரொம்ம்ப.. முக்கியம், டிபன் ரெடியா? இன்னிக்கு சீக்கிரம் ஆபீஸ்போகணும்" என்றான்.
கழுத்தில் வழிந்த வியர்வையின் எரிச்சலை தனது புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே கீழிறங்கிச் சென்றாள்.

ஆவிபறக்கும் காபியுடன் போட்டிபோடுமா செய்திகள் என்று அப்படியே தினசரியில் மேய்ந்து கொண்டிருந்தான். சூனா பானாக்களின் உலகப் பயணம், ராசி பலன், மணப்பந்தல், சினிமா விமர்சனம் என்று போய்க்கொண்டிருந்தது. கீழே, தன்னுடைய "டை"யைப் பிடித்து தொங்கிக் கொண்டே பள்ளிக்குச் செல்ல அழுதுகொண்டிருக்கும் எதிர்வீட்டுச் சிறுவன், உந்துருளியின் உள்ளே திணிக்கப்படுவதைப் பார்த்து ஒரு புன்முறுவலுடன் தினசரியைத் தொடர்ந்தான்.

ஆர்வம் குறைந்து மேலோட்டமாக மேய்ந்து கொண்டிருந்தவனை 8ஆவது பக்கத்தில் இருந்த அச்சிறிய பெட்டிச் செய்தி் கவர்ந்தது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகளில் தயாராகும் சில மருந்துப் பொருட்களுக்கான முதல்கட்ட பரிசோதனையை, இந்திய மக்களின்மேல் பரிசோதித்துக்கொள்ள இந்தியா அனுமதி வழங்கியிருப்பதாகச் சொன்னது செய்தி. செய்தியைப் பற்றி முழுவிபரம் தெரியாவிட்டாலும், இச்செய்தி ஏற்படுத்திய அதிருப்தியால் வாசிப்பைப் பாதியில்விட்டு அருகிலுள்ள தரிசு நிலத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.

தரிசு நிலத்தில் சில செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. அவை ஏதோவொன்றுக்கு கட்டுப்பட்டதுபோல் அந்த மேய்ச்சல் நிலத்துக்குளேயே மேய்ந்து கொண்டிருந்தன. அவ்வப்போது மேய்ந்து கொண்டே அந்நிலத்தைத் தாண்ட எத்தனிக்கும் போதெல்லாம் ஒரு குரல் அவற்றைத் தடுத்தது. ஒரேயொரு ஆட்டுக்குட்டி மட்டும் குரலை கவனியாதது போல அந்நிலத்தைத் தாண்ட முயன்றது. உடனே நான்குகால் பாய்ச்சலில் அருகில் வந்தன அந்த காவல் நாய்கள் இரண்டும். குலைநடுங்கிப் போன ஆட்டுக்குட்டி மந்தையுடன் கலந்தது.

நாய்களின் பாய்ச்சலில் இருந்த வேகமும், குரலும், ஒட்டுமொத்தமாக மந்தையையே நடுங்கச் செய்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பயம் கலந்த "ம்மே"க்கள் முனகல்களாக வந்து கொண்டிருந்தன. மீண்டும் இப்படியொரு செயலைச் செய்ய யாருக்காவது திணவிருக்கா என்ற ரீதியில் மந்தையை நோக்கி ஒரு மிடுக்குப் பார்வை பார்த்தன நாய்கள். பின்னர் கழுத்துப்பட்டையின் அரிப்பை பின்கால்களால் சுகமாக சொறிந்து விட்டுக்கொண்டு தனது சகாவுடன் சேர்ந்து வலம் வந்துகொண்டிருந்தன காவல் நாய்கள்.

இதையெல்லாம் மரத்தடியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று பார்த்துக்கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் ஈ விரட்டுவதற்காகச் சிலிர்த்தக் காதுகள், இப்போது ஏதோ ஒரு உணர்வு அடிப்படையில் சிலிர்ப்பது போல ஒட்டு மொத்தமாகத் தலையோடு சேர்த்து வேகமாக ஆட்டியது. கழுத்து மணிச் சிணுங்க, அந்த ஆட்டுக் கூட்டத்தை நோக்கிச் சென்றது மாடு.

ஆடுகள் இந்த புதுவரவைப் பெரிதுபடுத்தாமல் அவை தன் மேய்ச்சலைக் கவனித்தன. கழுத்தின் கீழ் ஏற்பட்ட அரிப்பை நாக்கால் சொறிந்துவிட்டுக் கொண்டு பெச ஆரம்பித்தது மாடு. "ஓ ஆட்டு மந்தைகளே ! ஏனிப்படியிருக்கிறீர்கள், எங்கு வேண்டுமானாலும் மேய்வது உங்களுக்குள்ள உரிமை, அதைத் தடுப்பதற்கும், தண்டிப்பதற்க்கும் இந்த நாய்களுக்கு ஏது அதிகாரம்" என்று செருமியது.

இந்தச் செருமலுக்கு ஒன்றிரண்டு ஆடுகள் தலை நிமிர்த்திவிட்டு, இது ஏதோ விவகாரம் என்று சொல்லி சற்றுத்தொலைவில் சென்று மேய ஆரம்பித்தன. ஓரு சில ஆடுகள் லேசாகத் தன் மேய்ச்சலை நிறுத்திவிட்டு பின் தலையைக் கூடத் தூக்காமல் மேய ஆரம்பித்தன. ஒரு சில இளம் ஆடுகள் ஏதோ புதிய ஒளியைக் கண்டது போல் அந்த மாட்டினருகில் வந்தன. ஒரு சில ஆடுகள் ஏதோ நடக்கப் போகுது நல்லா வேடிக்கை பார்க்கலாம் என்ற நினைப்பில் அருகில் வந்தன.

தனது செருமலுக்குக் கிடைத்த இந்தக் குறைந்த அளவு அங்கீகாரத்துடன் பேச ஆரம்பிடித்தது, "நண்பர்களே ! எங்கு வேண்டுமானலும் மேய்வது உங்களது உரிமை, அதைத் தடுப்பதற்கு இந்த நாய்களுக்கு உரிமையில்லை" என்று மீண்டும் கூறியது. மேலும் உங்களுக்கு எது விருப்பமோ அதை உங்கள் விருப்பப்படி உண்ண அனுமதிக்க வேண்டும், அதை விடுத்து உங்களை இந்த நிலத்திற்குள் இந்த வட்டத்திற்குள் மேயவேண்டும் என்று தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கழுத்தின் அரிப்பை நாவால் சொறிந்தபடியே பேசி முடித்தது.

உடனே ஒருசில ஆடுகள், "சரிண்ணே... நீங்க சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா யாரு கடிபடறது, வரப்புகிட்ட போனா குலை நடுங்கறா மாதிரியில்ல குலைக்குதுங்க. அதுக்குமேலே இந்த இடத்திலேயே நின்னு மேஞ்சுட்டுப் போவமே இப்ப என்னாதான் குறைஞ்சு போச்சு" என்றன.

"நீங்கெல்லாம் விவரம் தெரியாமல் இருக்கீங்க, நான் இதுவரைப் பல ஊருக்குப் போயிப் பல "கிடை"களைப் பார்த்திருக்கேன் தெரியுமா. இப்படியெல்லாம் உங்களை அடிமைபோல் வைத்திருக்கக்கூடாது . அதுமட்டுமா உங்களுடைய அடிப்படை உரிமைகளைக் காக்க, நமது சுற்றுப்புறத்தைக் காக்க இப்படிப் பல விசயங்களுக்குக் குரல் கொடுக்கப் பல குழுக்கள் இருக்கிறார்கள் தெரியுமா. இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போவுது என்னைப் போல் நாலு இடங்களுக்குப் போயி நாலு பேருடன் பழகினாதானே தெரியும்" என்று தன் நீண்ட சொற்பொழிவை முடித்துவிட்டு மீண்டும் கழுத்தில் ஏற்பட்ட அரிப்பை நாக்கால் சரி செய்தது.

"அண்ணே நீங்க நாலு எடத்துக்குப் போயிட்டு வந்தவரு அதனால வெவரமா பேசறீங்க. எங்களுக்கு இந்த வயக்காட்டவுட்டா என்னா தெரியும் அதுவும் புதுசா இந்த நாய்கள் தொல்லை வேற, நாங்க இப்ப என்னதான் செய்யணும் அதையும் வெவரமா சொல்லுங்க."

"நீங்க இத்தனைப்பேர் இருக்கீங்க அதுகரெண்டே ரெண்டு நாய்தான் அதுங்களை உங்களாலே ஒன்னா நின்னு முட்ட முடியாது ? நீங்க எல்லோரும் சேர்ந்து நின்னோஅதுங்களால ஒன்னும் செய்ய முடியாது..." என்று முடிக்கும் முன்னரே அங்கு வேடிக்கைப் பார்க்க வந்த சில ஆடுகள் இது ஏதோ விவகரம் என்பதுபோல நழுவ ஆரம்பித்தன.

சரியென்று ஒரு சுபயோகக் கனத்தில் இரண்டு வெள்ளாடுகளும் இரண்டு செம்மறியாடுகளும் சிலிர்த்துக் கொண்டு பொறுப்பேற்றன. அதன்படி அவை தங்கள் கூட்டத்திடம் சென்று பல சொற்பொழிவுகள் ஆற்றி அனைவரும் ஒன்றுகூடி வரப்பைக் கடப்போம் என்று முடிவு செய்தன. அப்படியே , வெள்ளாடுகள் ஒரு குழுவாகவும் செம்மறியாடுகள் ஒரு குழுவாகவும்
வரப்பை நோக்கி முன்னேறின. ஆனால் வரப்பருகே சென்றவுடன் எழுந்த குரலில் பின்னாலிருந்த ஆடுகள் பாதி சிதறி ஓடின மீதி பீதியுடன் நடுங்கிக் கொண்டிருந்தன. நாய்கள் அருகில் வந்தவுடன் அனைத்தும் ஓட்டமாகச் சிதறி மேய்ச்சல் நிலத்திற்கு நடுவில் வந்தன.

இப்போது அந்த நான்கு ஆடுகள் மட்டும் தனியே நின்றன, தமக்குப் பின்னால் ஒரு போர்ப்படையே இருப்பது பொன்ற நினைப்பில் நின்றுருந்தவை இப்போது லேசாக நடுங்க ஆரம்பித்தன. பின்னர் மெதுவாக அச்சத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மற்ற ஆடுகளைப் பயங்கொள்ளிகள் என்று திட்டிக்கொண்டே மந்தையோடு ஒன்று சேர்ந்தன.

இதைக் கவனித்துக்கொண்டிருந்த மாடு, அந்த ஆட்டுமந்தையை ஒரு அலட்சியப் பார்வைப் பார்த்தது. பின்னர் நீங்களெல்லாம் எங்கே முன்னேறப்போகிறீர்கள், உங்களுக்கு மேய்வதற்கான இடத்தைத் தேர்வு செய்யவும் உரிமையில்லை, அதை வாங்கும் தைரியமும் இல்லை என்பதுபோல ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துவிட்டு மேய ஆரம்பித்தது.

இப்போது தனக்கு மிக அருகில் அதற்கு மிகவும் பிடித்தனமான ஒரு செடியிருப்பதைப் பார்த்தது. உடனே மிகவும் ஆனந்தத்துடன் அதன் அருகே செல்ல யத்தனித்தது.

இவ்வளவு நேரம் வெறும் அரிப்பு மட்டுமேயிருந்த கழுத்தில் இப்போது ஏதோவொன்று அதைப் பின்னோக்கியிழுப்பது போல் தோன்றியது. பின்னர் அது எவ்வளவோ முயன்றும் அந்தச் செடியின் இலைகளை தனது நுனிநாக்கால் நக்க மட்டுமே முடிந்தது. பின்னர் முயற்சியைக் கைவிட்டுப் பின்புறம் நோக்கியது, அது படுத்திருந்த மரத்தடி சற்று தொலைவில் இருப்பது தெரிந்தது.

அப்படியே அந்தப்பக்கம் திரும்பியது, ஒரு ஆட்டுக்குட்டியை வரப்பிலிருந்து விரட்டிக்கொண்டிருந்தது நாய். சறிது நேரம் அந்தக் குட்டியைப்பார்த்தது, பின்னர் அந்தச் செடியையே முறைத்துப் பார்த்துவிட்டு தான் படுத்திருந்த மரத்தடியே சென்று அசைபோட ஆரம்பித்தது.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்த சங்கரன் செய்தியைவிட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். அந்த ஒப்பந்தத்தை எதிர்த்த, பொதுநல வாதிகள், ஒருமித்த கருத்து கொண்ட தோழர்கள், பொதுமக்கள் எனப் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றது செய்தி. ஏதோ ஒரு கோபம் கலந்த வருத்தம் இருந்தது அவனது கடிகாரம் அலுவலகம் செல்லும் நேரத்தைக் காட்டும் வரை..

கழுத்தின் பின்புறம் இருந்த அரிப்பை தனது சுண்டு விரலால் லாவகமாக சொறிந்து கொண்டே "டிபன் ரெடியா.." என்று கீழேயிறங்கிச் சென்றான். அன்றைக்கு மருந்துகள் பரிந்துரைக்கச் செல்ல வேண்டிய இடங்கள் மனதில் ஒடியது.

************************************************************************************************************
உரையாடல் சிறுகதைப் போட்டிக்காகத்தான் எழுதினேன். ஆனால், நான் ஏற்கனவே எழுதிய ஒரு சிறுகதையின் தழுவலிலேயே இருப்பதாக வாசித்த நண்பர்கள் குறிப்பிட்டதால் போட்டிக்கில்லாமல் உங்கள் பார்வைக்கு மட்டும் இருக்கட்டும் என்றும் இங்கே.


Monday, June 8, 2009

இலங்கை - கற்பிதங்கள் 10



இலங்கையில் நடந்த போரும் அதன் முடிவும் பற்றி "திரு. சத்யா சாகர் " அவர்கள் எழுதிய "கற்பிதங்கள் 10" என்ற கட்டுரையொன்று கீழுள்ள சுட்டியில். ஒரு பகிர்வுக்காக இங்கே...

முழு விபரமும் இங்கே - " http://transcurrents.com/tc/2009/06/the_ten_great_myths_of_modern.html "

சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் இங்கே வெட்டி ஒட்டியிருக்கிறேன்.
**********************************************************************************

"The Ten Great Myths of Modern Sri Lanka"

- By Satya Sagar

Myth One: The Sri Lankan government is/was at war with the LTTE:
"...............................If the LTTE has used terrorist methods to further its cause there is no doubt that the Sri Lankan government has used genocidal methods to put them down................."


Myth Two: The Mahinda Rajapakse government has ‘won' the ‘civil war' and successfully prevented the division of Sri Lanka :

"......How many governments herd all citizens of a linguistic minority into concentration camps to be treated as terrorists simply because of their identity? And after doing all this what right do they have to call themselves ‘one nation'?......"


Myth Four: The Sri Lankan Tamils will gang up with Indian Tamils and create a ‘Greater Tamil' nation:

"..........................they have not really done much for them. Over the past twenty years there are thousands of Sri Lankan Tamil refugees languishing in Tamil Nadu without proper shelters, livelihood, education for their children or even safety from arbitrary arrest by local police.............."


Myth Five: Sri Lanka has a special place in world Buddhism and its territorial integrity needs to be protected by the Sinhala people:

"...............These champions of Buddhism have no doubt become its greatest destroyers............"


Myth Seven: A majority of the Sinhalese people are racists and chauvinists:

".............Today most of these Sinhala people are also being held hostage by the fascist Rajapakse regime, which has turned Sri Lankan nationalism into a family-run dictatorship guarded by guns purchased with the people's own hard earned money.................."


Myth Nine - The Indian government, once supportive of the Sri Lankan Tamils, has turned against them:

"........ the Indian government does not really care for either the Sri Lankan Tamils or the Sinhalese for that matter. Like in most countries of South Asia successive Indian regimes too have only been bothered about preserving the power of the corporate or feudal elites and care little for their ordinary citizens........"

************************************************************************************

முழு விபரமும் இங்கே - " http://transcurrents.com/tc/2009/06/the_ten_great_myths_of_modern.html "

குறிப்பு: Myth - கற்பிதம் சரியான மொழிபெயற்பா..??

Friday, June 5, 2009

இந்தியாவிலுள்ள போலி பல்கலைக்கழங்கங்களின் பட்டியல்



இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழகம், கேரளா, பீகார், மேற்கு வங்காளம், மகாராஷ்ட்ரா , ம.பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் தலா ஒரு பல்கலைக்கழகமும், உ.பி மற்றும் டில்லியில் முறையே ஒன்பது மற்றும் ஆறு பல்கலைக்கழகங்களும் போலிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

"State-wise List of fake Universities as on 18thJanuary, 2009"



Tamil Nadu - D.D.B. Sanskrit University, Putur, Trichi, Tamil Nadu.

முழுப்பட்டியல் இங்கே - http://www.ugc.ac.in/inside/fakealerts.html

இதோடு அமெரிக்காவில் இயங்கும் பல்கலைக்கழகம் என்று தன்னை அறிவித்துக் கொண்டு " American University of Hawaii" என்ற பெயரில் போலியாக இந்தியாவில் பட்டங்கள் வழங்கிவந்த ஒரு பல்கழைக்கழமும் பிடிபட்டிருக்கிறது.

"American University of Hawaii (AUH) operating in India is not accredited by any recognized accrediting agency and not licensed or approved by the State of Hawaii."

இதுபற்றிய முழுவிபரம் இங்கே : http://www.ugc.ac.in/inside/malprac.html

***********************************************************

இனி மற்றொரு சுவாரஸ்யமான செய்தி..

UGC ன் முகப்பு பக்கத்தில் (http://www.ugc.ac.in/index.html ) இப்போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் புதியவை என மின்னிக்கொண்டிருக்கிறது.
அந்தச் சுட்டியைத் தொடர்ந்து உள்ளே சென்றால் 18 சனவரி 2009 நிலவரப்படியான பட்டியல் என்று தெரிவிக்கிறது. ஆனால் அதே பக்கத்தில் அச்சு ஊடகங்களுக்கான (press release) அறிக்கையை நோக்கினால் தேதியில் எல்லாமே 2007 என்றிருக்கிறது...

அதுமட்டுமல்ல சுட்டியில் டில்லியின் கீழ் ஆறு பல்கலைக்கழகங்களின் பெயர் கொண்ட பட்டியல் இருக்கிறது. ஆனால் "press release" ல் ஐந்தின் பெயர்கள்தான் இருக்கிறது. ஒருவேளை அது பழைய "press release" ஆக இருக்குமோ இந்த சுட்டியின் கீழ் தவறுதலாகக் கொடுத்துவிட்டார்களோ... :((

Thursday, June 4, 2009

தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - லெ மாந்த் பத்திரிக்கை குற்றச்சாட்டு

இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளருபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.html

இனி அக்கட்டுரையிலிருந்து..


"L'ONU a caché l'ampleur des massacres au Sri Lanka,"

"தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா"

இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலில்லை. இறப்பு எண்ணிக்கை குறைத்தே வெளியிடப்பட்டுள்ளது. முறைதவறியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக போதிய ஆவணங்கள் இருந்தும் ஐ.நா வின் மேல்மட்டம் அமைதிகாத்திருப்பது "லெ மாந்த்" பத்திரிக்கையின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

போரின் இறுதி நிகழ்வுகளை "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிட்டாலும், கொழும்பின் மீதான பக்கச் சார்பினால், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் தமது கடமையிலிருந்து ஐ.நா மன்றம் தவறியிருக்கிறது.
இறந்தவர் எண்ணிக்கை பற்றிய உண்மையான அறிக்கையை வெளியிட மறுத்தது அதன் செயல்பாடுகளின் குறைகளைச் சுட்டுகிறது.

புலிகளுக்கெதிராக நடைபெற்ற இந்தப் போரில், ஐ.நாவின் கள ஊழியர்கள், அரசு சாரா உதவிக்குழுக்கள் (NGOs), மருத்துவர்கள் மற்றும் மத போதகர்கள் அளித்த உயிரழப்புக்கள் குறித்த எண்ணிக்கைகளை ஐ.நாவின் அதிகாரக்குழுக்களுள் சில, தொடர்ந்து இடையீடு செய்ததோடு, எண்களைக் குறைத்தும், திருத்தியும் இருக்கின்றனர்.

இதன் உச்சகட்டமாக சனவரி 20 ஆம் தேதியிலிருந்து மே 13 வரை ( இறுதித் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்புவரை ) இறந்தவரின் எண்ணிக்கை 7,720 (678 குழ்ந்தைகள் உட்பட) எனவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 18,465 ( 2,384 குழந்தைகள் உட்பட) எனவும் தெரிவிக்கிறது அறிக்கை. " இவ்வறிக்கையை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் ஊழியர் ஒருவர்.

இறப்பு எண்ணிக்கைகள் பத்திரிக்கைகளுக்கு பல வழிகளில் சென்றடைந்த போதும், கொழும்பிலிருந்த ஐ.நா வின் ஒருங்கிணைப்பாளரான Neil Buhne மட்டுமே இதுகுறித்து பதிலளிப்பவராக இருந்தார். ஆனால், பொதுவாக ஐ.நா வின் மூத்த அதிகாரிகள் இது குறித்து பேசுவதிலிருந்து விலகியேயிருந்தனர்.

ஐ.நா வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் சிறப்பு தனிச் செயளர் விஜய் நம்பியாரின் கருத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும், மனித உரிமைகள் செயலாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் நம்பிக்கைக்குறிய தகவல்களை (அப்பொழுது சாவு எண்ணிக்கை 2,800) வெளியிடவேண்டுமென விருப்பினார். ஆனால், இத்தரவுகள் கொழும்பினுடனான உறவினை சீர் கெடுக்கும் என மனித உரிமைகள் செயலகத்தின் தொடர்பாளரான ஜான் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.


இறந்தவர் எண்ணிக்கை 20,000 ஐத் (இது ஒரு உத்தேசமான மதிப்பீடு) தொடலாம் என்ற நம்பிக்கை ஐ.நா அதிகாரியான விஜய் நம்பியாரிடம் தெரிவிக்கப் பட்டிருந்த போதும், இறுதித் தாக்குதல் வாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல், இந்த 7,700 என்ற எண் தொடர்ந்து அச்சு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

துவக்கத்திலிருந்தே ஐ.நா இம்மோசமான சூழலை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
23 சனவரி 2009 அன்று, இரண்டு சர்வதேச உறுப்பினர் உட்பட 17 ஐ.நா ஊழியர்கள், பாதுகாப்புப் பிரதேசம் என அறிவிக்கப் பட்ட உடையார்காடு முகாமில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கை இராணுவம் அவ்விடத்தை குண்டுவீசி தாக்கியதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியானர் எனக் குறிப்பிடுகின்றனர். மேலும், அருகிலிருந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஐ.நா வின் ஊழியர்கள், காயமடைந்த பெண்கள், உருக்குலைந்த, கருகிய மற்றும் உறுப்புகளிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில், போர்ப்பகுதிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ஐ.நாவின் ஊழியர்களும், அரசு சாரா உதவிக்குழுக்களின் ஊழியர்களும், தொடர்ந்து ஐ.நாவின் அதிகாரிகளுக்குப் போர்நிலவரங்களை குறுஞ்செய்திகள் "SMS" மூலமாகத் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினரால் குண்டு வீசப்பட்ட மருத்துவமனைகள் குறித்தும், நூற்றுக் கணக்கான இறந்தவர் பற்றியும், ஆயிரக்கணக்கான காயமடைந்தோர் பற்றியும் தொடர்ந்து போர்நிலவரம் பற்றி குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்திருக்கின்றனர் அவ்வூழியர்கள்.

9 மார்ச் 2009 அன்று வந்த குறுஞ்செய்தி - "தயவு செய்து இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள்"

14 மார்ச் 2009 - "எங்கேயிருக்கிறது பாதுகாப்பு வலையம்"

இத்தனைக் குழப்பங்களுக்குமிடையே புலிகளின் பலவந்தமான ஆள் எடுப்பு நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது.

12 மார்ச் 2009 - " இரண்டு முகாம்களும் வதைக்கின்றன" " நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். பத்து மீட்டருக்கருகில் இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்திருக்கிறது."

19 மார்ச் 2009 - "இளவயதினர் போர்களத்திற்குக் கொண்டு செல்லப் படுகின்றனர். என்ன செய்யப் போகிறது சர்வதேச சமூகம்"

21 மார்ச் 2009 - "தப்பிக்க முயன்ற நூற்றுக்கணக்கான மக்களைச் சில குண்டர்கள் தடுத்துச் சிறைபிடிக்கின்றனர். அவர்கள் வயது வித்தியாசமும், பாலின வித்தியாசமும் பாராமல், அவர்களைக் கம்புகளால் கடுமையாகத் தாக்குகின்றனர்." " ஏன் சர்வதேச சமூகம் அமைதி காக்கிறது?"

இக்கட்டான இச்சூழலில் ஐ.நா தனது "UNOSAT" பிரிவின் உதவியை நாடி, மக்கள் இடம்பெயர்வு குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கோரியது. செயற்கைக்கோள் படங்கள் வான் வழித்தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாட்டால் விளைந்த 12 மீட்டர் விட்டம் கொண்ட குழிகளைக் கொண்டிருந்தன.

"ஐ.நாவின் தலைமையிடம், இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்த போதிலும், ஒரு நாள் கூட அங்கு கனரக ஆயுதங்களின் பாவிப்பு நிறுத்தப்படவில்லை," என ஒரு பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். ஐ.நா இவ்வாதாரங்களை தன் கைகளில் கொண்டிருந்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏப்ரல் மாதத்தின் இடைக்காலத்தில், ஐ.நா விற்கு விஜயம் செய்த விஜய நம்பியார், "ஐ.நா இப்பிரச்சனையில் அடக்கி வாசிக்க வேண்டும்" என்றும் " இலங்கை அரசாங்கத்துடன் இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் பொதுமக்களினது இறப்புகளின் எண்ணிக்கையும் காயம்பட்டோரின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களைத் தொட்டுவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், கொழும்பு, போர்ப்பகுதிகளுக்கு மனிதநேய உதவிக்குழுக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவித்தது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வை உலகம் காணவில்லை.

நியூயார்க்கிலிருந்து கொழும்பு வரையுள்ள ஐ.நாவின் மேல்மட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் பலருக்கு் அதிருப்தியளித்திருக்கிறது. "அவர்கள் ஒரு பாரிய மனிதப் படுகொலைக்குத் தயாராகிவிட்டிருந்தனர்" என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். "பல மாதங்களாகப் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் யாரும் அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டவில்லை" என்று ஒரு மக்கள் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேநேரம், உயர்மட்டத்தில் இல்லாத எந்தவொரு ஊழியரையும், நசுக்கவும், மிரட்டவும், அச்சுறுத்தவும், வெளியேற்றவும் இலங்கை அரசாங்கம் சிறிதும் தயங்கவேயில்லை.

மே 11 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, கொழும்புவிற்கான ஐ.நா வின் பிரதிநிதியான திரு. Gordan Weiss இதனை இறுதியில் ஒரு "இரத்த வெள்ளம்" என்று குறிப்பிடுகிறார். உடனடியாக இலங்கை அரசாங்கம் இதற்கான விளக்கத்தினைக் கோருகிறது. பின்னர் அவ்வதிகாரி அக்குறிப்பினை கைவிடுகிறார். இச்செய்தி பற்றி BBCல் Amin Awad, எனும் அகதிகளுக்கான உயர் கமிஷனின் பிராந்திய அதிகாரி குறிப்பிடுகையில், இரண்டு தரப்புகளின் குற்றச்சாட்டுகளைப் பிரித்தறிவது கடினமான செயலாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

17 மே 2009 அரசாங்கம் தனது வெற்றிச் செய்தியினை அறிவித்ததை சந்தேகிக்கும் அல்ஜசீராவைச் சேர்ந்த திரு. Awad, அதற்கு காரணமாக, போர்ப்பகுதியிலிருந்த 20,000 மக்கள் வெளியேறினர் என்று அரசாங்கம் பின்னர் வெளியிட்ட செய்தியினை சுட்டிக் காட்டுகின்றார். மேலும், "இந்த அறிவிப்பானது அரசாங்கம் அங்கு குண்டுமழை பொழிவதற்கான முன் ஏற்பாடக கருதலாம்" என ஐநா வின் ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

போரின் முடிவு, இருக்கும் பிரச்சனைகளின் முடிவல்ல. 3,00,000 க்கும் மேலான இடம்பெயர்ந்தோர் உள்ள முகாம்களில் அரசு சாரா உதவிக் குழுக்கள் (NGO) கடுமையான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
"செய்து கொண்ட சமரசங்கள் போதும்" என்று பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கும், முகாம்களில் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும், முகாம்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கும், ஆவன செய்யாத ஐ.நா வை நோக்கி தன்னுடைய குற்றச்சாட்டினை வைக்கிறார் ஒரு NGO ஊழியர்.

மே 11 ஆம் தேதி, திரு.Neil Buhne, என்பவருக்கு 7 NGO க்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில், வடக்கில் Menik Farm எனும் முகாமில் ஐ.நா உதவியுடன் இலங்கை அரசாங்கம் செய்து வரும் போருக்குப் பின்னான புனரமைப்புப் பணிகளில், "ஏறத்தாழ நிரந்தரமாக மக்களை முகாம்களில் தங்க வைக்கும் திட்டமும்" முகாமைச் சுற்றி நிகழும் கட்டுமானச் செயல்களும் ஒரு நிரந்தரத் தங்குமுகாமிற்கான கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். மேலும், "நம்முடைய செயல்கள் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களின் சுயமரியாதையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் முகமாக அமையவேண்டும்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

- Philippe Bolopion
************************************************************************************

இப்பத்திரிக்கையின் சுட்டியை இப்பதிவில் பகிர்ந்து கொண்ட திரு.நாகார்ஜுனன், மற்றும் தமிழாக்கத்தில் பங்குகொண்ட நண்பர் "பதி"க்கும் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்து உதவிய அவரது நண்பர்களுக்கும் நன்றி.